மாநில முதல் பரிசு பெற்ற கவிதையும் உருவான பின்னணியும்
அப்போது, முதுகலை செவ்வியல் தமிழ் முதலாமாண்டு பாடத்தில் கவிதை பற்றிய வகுப்புகள் நடக்கும். பேராசிரிய நண்பர்களான திருநாவுக்காரசும் வனிதாவும் வேறலெவல் கவிதைகளை அறிமுகம் செய்வார்கள். பித்துப் பிடித்த நிலையில் அதன் பொருளுணரத் தேடி தோற்றுபோன வகுப்புகளே அதிகம். நவீனத்தை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில் மனம் தடுமாறிக் கொண்டிருந்தது. ஆயினும், சிற்பி, சுகிர்தராணி முதலானவர்களின் சொல்எளிமையும் பொருட்செறிவும் படிமமும் எதுகையும் மோனையுமே கவிதை என்றிருந்த மனபிம்பங்களை உடைத்துத் தூக்கிப் போட்டிருந்தது.
வழக்கொழிந்த போன மரபுக் கவிதையில் கூடிய வரை தளை தட்டினாலும் தடம்மாறாமால் முயற்சித்துக் கொண்டிருந்தேன். மரபுக் கவிதையில் புழங்கிய சொற்களையே செதுக்குவதால் சாரம் குன்றிப் போய் இருந்தது. இந்நிலையில் இராமலிங்கர் பணிமன்றத்தின் மண்டல அளவிலான கவிதைப் போட்டியில் மரபுக் கவிதையெழுதி மூன்றாம் பரிசு பெற்று மாநிலப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தேன்.
மாநிலப் போட்டிக்கு இரு நாட்களுக்கு முன்பு, அ.கி. பரந்தாமனின் கவிஞராக நூலை பிரித்து மேய்ந்தாகிவிட்டது. ஆனாலும், செரிமானம் ஆனதாயில்லை. திருநாவுக்கரசு “என்னடா செய்திட்டிருக்க… கடைசி வரை இப்படியே தானா…?” என கேட்டுச் சென்றார். என்ன செய்யப்போகிறோம் எனத் தெரியவில்லை போட்டி நாளும் வந்தது.
2016 செப்டம்பர் 24 காலை 11.00 மணி
மாநிலத்தை எட்டு மண்டலங்களாகப் பிரித்து, போட்டி நடத்தியிருந்தனர் இராமலிங்கர் பணிமன்றத்தினர். எட்டு மண்டலங்களிலும் முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் பொள்ளாச்சி என்ஜிஎம் கல்லூரி வளாகத்தில் நடைபெறத் தயாராக இருந்தன. அரங்கத் தலைப்பு (spot topic). தலைப்பு அறிவித்து ஒரு மணி நேரத்திற்குள் கவிதை எழுதித் தந்தாக வேண்டும். வழக்கம் போல் மூளை வெற்றிடமாக இருந்தது. “என்னைச் செதுக்கிய ஒற்றை வாசகம்” எனத் தலைப்பு அறிவித்தனர்.
எட்டு மண்டலத்திலிருந்தும் வென்ற கவிச்சிறகுகள் பறக்கத் தயாராகின. பலரது முகமும் பிரகாசமானது. எழுத இலகுவான தலைப்பு. சங்க இலக்கியத்தின் திருக்குறளின் பாரதியின் ஔவையின் ஒவ்வொரு சொற்றொடருமே தமிழறிந்தவர்களுக்கு மிகவும் அணுக்கம். “ரௌத்திரம் பழகு, வீழ்வேனென்று நினைத்தாயோ…” என்ற புரட்சிகர வரிகள் ஆக்ரோச கவிஞர்களுக்கு ஆஸ்தானமானது. “இங்கே சிறுநீர் கழிக்காதே, கைநீட்டாதீர், வாய்மையே வெல்லும்” போன்றவை சமூக எதார்த்தங்களை எழுதுவோருக்கு எளிமையானது. இந்த மூன்று தடங்களில் எதில் பயணிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையிலே எதிலும் வேண்டாம் என முடிவெடுத்திட்டேன்.
இம்முறை கவிதையில் மீஉண்மையை எழுதுவோமே என்றெண்ணி, எந்த வாசகம் எனக்குப் பிடித்ததென்று அன்றிலிந்து நினைவு தெரிந்த காலம் வரை பின்னோக்கிப் பயணித்தேன். ஆங். திரு.வி.க கல்லூரியில் படித்தபோது, தேநீர் குடிக்க நண்பர்களுடன் செல்வதுண்டு. 55+ வயதுடைய திருமணமாகாத டீ மாஸ்டர், தான் படித்த தனக்குப் பிடித்த பிறருக்குப் பயன்படும் வாசகங்களை எடுத்துவந்து சிற்றுண்டியக சுவற்றில் ஒட்டி வைப்பார்.
அப்படி ஒரு முறை, புதிய தலைமுறை இதழின் நடுப்பக்கத்தில் வெளியான வாசகம் மிகப்பிடித்தமானது. அது அயல்நாட்டவரின் வாசகம். அயல்நாட்டறிஞர் ஒருவரின் வாசகத்தை ஏன் எழுதினீர்கள் “இங்கு, ஏதும் இல்லையா” எனக் கேள்விகள் யாரேனும் கேட்டால் என்செய்வேன்… என யோசிக்கையில் பரிசுக்கு உண்மையாய் இருப்பதை விட தலைப்பிற்கு உண்மையாய் இருப்பதே உசிதம் எனப் பட்டது.
இம்முறை புதிய சொல்லாடல்களும் பயன்படுத்த ஆயத்தமானேன். Clicheவைத் தவிர்க்க நினைத்தேன். படித்த பார்த்த கேட்டவற்றிலிருந்து சொற்களை வடித்தெடுக்கத் தொடங்கினேன். பொருட்செறிவு கருதி, மூன்று இடங்களில் நண்பன் வெற்றிச்செல்வன் மற்றும் பிற கவிஞர்களால் எழுதப்பெற்ற சொற்கோர்வைகளை மீட்டுருவாக்கினேன். அப்போதைய காவிரி பிரச்சினை, எனக்கிருந்த பல பிரச்சினைகளோடு கவிதை ஏனோ தானோவென்று உருவானது. தளை பற்றிக் கவலைப்படாது ஏதேதோ சீர் கொண்டு எழுதுகையிலே ஒரு நிறைவு. பரிசே கிடைக்கவில்லை என்றாலும், இதுவே இதுவரையிலான என்னில் சிறந்த கவிதையாக இருக்கும் என்ற உணர்வு. பக்கத்தில் எழுதிக்கொண்டிருந்த விநோதினி, சம்பத் முதலான நவீன கவிதை ஜாம்பாவான்களுக்கும் இதே உணர்வு இருந்திருக்கும். தலைப்பு அப்படிப்பட்டதாயிற்றே.
***
சிலநாட்களுக்குப் பின், வகுப்பு நடந்துகொண்டிருக்கையில், ஒளிர்ந்த பேசி மாநிலத்தில் முதலிடம் என்ற செய்தி முரசறைந்தது. எதிர்பார்த்த ஒன்று தான். ஆனால், துறையில் வீட்டில் நண்பர்களிடத்தில் இது முற்றிலும் எதிர்பார்க்காதது. அடுத்த சில நாட்கள் சிக்கியவர்களிடத்தெல்லாம் அக்கவிதையை(!) சொல்லிக்காட்டுவதோடு அரைமணிநேரம் பொழிப்புரை வேறு செய்துகொண்டிருந்தேன். தமிழ் சேர்ந்த நான்கு மாதத்துள் மூன்றாவது முறையாகப் பெறப்போகும் மாநிலத்தில் முதல் பரிசு.
2016 அக்டோபர் 02
மயிலாப்பூர் ஏவிஎம் இராஜேஸ்வரி அரங்கில் நடைபெற்ற இராமலிங்கர் பணிமன்ற விழாவில் கவிதைப் போட்டியில் வென்றமைக்காக மாநில அளவில் முதல் பரிசு (ரூ.5000/-, கேடயம், நூல்கள், சான்றிதழ்) தரப்பெற்றது. இதே பரிசு எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பொறியியல் மாணவி விஜய பாரதி க்கும் தரப்பெற்றது.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 2016-17 கல்வியாண்டில் வெளியான ஆண்டு மலரில் தமிழ் மொழிப் பிரிவில் அக்கவிதை அலங்கரித்தது.
என்னைச் செதுக்கிய ஒற்றை வாசகம் ரூமியினுடையது.
(சந்தி பிரித்த வடிவில்) அக்கவிதை,
என்னை செதுக்கிய ஒற்றை வாசகம்
தலைப்பைக் கேட்டதும் என் தலைப்பை சுரந்தவை
மலைப்பைக் கூட்டியே என் மனதைக் கவர்ந்தவை
களிஎனப் பலர் சொன்னதை, நிலைமாற்றியதொரு வாசகம்
உளி ஒன்றில்லாமலே, சிலைவடித்ததிரு வாசகம்
கடலில் வீழ்ந்தால் தப்பாமல் உப்பாகலாம் என்றவனை
நம்பினால் வீழ்ந்தாலும் தப்பித்து முத்தாகலாம் என்றது
ஓயாமல் பெய்யும் மழையிலே அசைந்தாட கிளைகளற்ற
என்மர வேர்களுக்குக் குருதித் தானம் கொடுத்தது
பச்சையம் மறைந்த என்னிலை மனதிற்கு நீ
நிச்சயம் மீள்வாய் எனஒளிச் சேர்க்கை தந்தது
மண்ணோடு மண்ணாவேன் எனும் வடுமாவையெல்லாம்
மண்ணோடு மரமாவேன் எனத் தோப்பாக்கியது
நிலைகொள்ளாப் புயல்வளியில் சிறைப்பட்ட எனக்கு
கரைகொள்ள மீகாமனாய் கரம்பிடித்தழைத்தது
என்விரல் நீலக்குருதி வடிக்கும் போதெல்லாம்
இவ்வாசகம் சொன்னது உலகமுன் கைபற்றுமென்று
அறுவாமல் தேய்ந்துநொந்த காலணிக் கால்களுக்கு நிலை
வலுவேற்றி வானத்தில் வலமர வாய்ப்பளித்தது
அணையில் முடமாகிய தலைக்காவிரி என்னை
ஐந்திணை தமிழகத்தில் நடந்தோடி செழிக்கச் செய்தது
நான் மனமுடைந்து தனமகன்று அறிவுப்பசி கொள்கையில்
வான் மதகுடைத்து பயிர்வளர்த்த கார்முகிலாய்க் காத்தது
இவ்வாறாய்,
குருதிக்குள் கொப்பளித்து
மூளைக்குள் மூச்சிவிட்டு
எனக்குப் பரிதியாய் இருந்த
என்னைச் செதுக்கிய அந்த ஒற்றை வாசகம்
நீ கடலின் ஒரு துளி அல்ல,
ஒரு துளியின் ஒட்டுமொத்தக் கடல்.
– த.க
No Comments