வளர்த்தெடுத்த சுபாஷ் காந்தி!

சார், ஒரே ஒரு முறை எனக்கொரு டீ வாங்கிக்கொடுத்துட்டு போங்க!
Rest in Peace Subash Gandhi 😞😔

நள்ளிரவு மூன்று மணியிருக்கும். முதல் நாள் எதிரி விட்ட சாபத்தில் பல நல்ல கனவுகள் அடுத்தடுத்து ஒளிபரப்பப்பட்ட மனத்தில் சற்றே இடைவெளி விட்டிருந்தேன். தண்ணீர் குடித்து கண்ணயரலாம் என நேரத்தைப் பார்க்கையில் செல்பேசி இணையம் இணைப்பிலேயே இருந்தது. குடித்தத் தண்ணீர் குடலிறங்குவதற்குள் செல்பேசியை இயக்கத் தொடங்கினேன்.

புலனத்தில் முக்கியத் தகவல்கள் ஏதேனும் வந்துள்ளனவா என நோக்குகையில் ஏதுமில்லை. ஒருநாள் நிலைப்பதிவை வெளியிருந்தே பார்க்கையில் தோழிகளின் முன்னிரவு பாடல்களும் தோழன்களின் காதல் தோல்விப் பாடல்களும் இடம்பெற்றிருந்தன. ஊடே இருவர் சுபாஷ்காந்தி அவர்களின் படத்தை வைத்திருந்தார்கள். ஆனால், அதைப் படிக்க மனம் வரவில்லை. படிக்கவும் வேண்டாம் எனத் தள்ளிப் போட்டு, இணையத்தை அணைத்து ரஜாய் இழுத்துப் போர்த்தி வராத் தூக்கத்தை வரவழைத்துக் கொண்டேன்.

காலை எட்டு இருக்கும். இப்போதும் இணையத்தை இணைக்க வில்லை. வேறு யாரேனும் சுபாஷ்காந்தியின் படத்தை வைத்திருந்தால் அதைப் பார்க்கும் மனதிடமற்று, அதிகாலையில் வைத்திருந்த அந்த இருவரின் பதிவை விரிவு செய்து பார்க்கையில், மனம் ஊகித்த செய்தி தான் சுபாஷ் காந்தி மரணித்திருக்கிறார். ஹ்ஹ்ஹ்ஹ்ம்.

சிறுபிள்ளையிலிருந்து திருவாரூரின் சமூக அடையாளங்களாகக் கருதிய மூவர் ஜிவி என்கிற ஜி. வரதராஜன் (சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற (2011) திருவாரூர் நகரமன்ற 4வது வார்டு உறுப்பினர்)., சுபாஷ் காந்தி (பாரதி மக்கள் மன்றத் தலைவர், சமூக செயல்பாட்டாளர்), இரெ. முத்துக்குமார் (மேனாள் அரிமா சங்கத் தலைவர்). இம்மூவரையும் ஒருவரை ஒருவர் பிரித்துப் பார்க்க முடியாத அளவினுக்கு பிணைப்புக் கொண்டிருந்த காலத்தில் தான் நான் இடைநிலைக் கல்வி பயின்று கொண்டிருந்தேன். அப்போது தான் அவர்களின் அறிமுகம். இப்போது வரை தொடர்ந்து வருகிறது.

திருவாரூரில் பிறை. அறிவழகன் https://bit.ly/2VPs8rG (குடிமக்கள் நுகர்வோர் மன்றம்), மழைநீர் வரதராஜன் (நீர் பொறியாளர்), கேசி https://bit.ly/2RrToOk (தமிழ்நாடு அறிவியல் இயக்கம்) போன்ற பெருந்தலைகள் சமூகத்திற்கு தத்தம் அமைப்பு வழியே செய்து கொண்டிருந்த பெரும்பங்கின் அடுத்தத் தலைமுறையினர் தான் ஜீவியும் சுபாஷ் காந்தியும் முத்துக்குமாரும். இம்மூவரையும் தனிப்பட்ட எந்தவொரு அமைப்பின் சுவர்களுக்குள் அடக்கிவிட முடியாது.

மாணவர்களுக்கு ஏதேனும் பயிற்சி என்றால், நேரடியாகச் சென்று பயிற்சி அளிக்கும் கருத்தாளுமைகள் தான் இம்மூவரும். எல்லா ஆண்டும் நாட்டு நலப் பணித்திட்ட முகாம்களில் இம்மூவரின் தவறாத வருகை சுற்று வட்டாரத் திருவாரூர் மாணவர்களுக்குக் கருத்தாக்கத்தை நிச்சயம் உருவாக்கித் தந்திருக்கும். அதனாலே எல்லா ஆண்டுகளும் இவர்தம் வருகையை ஆசிரியர்கள் உற்றுநோக்குவர். இதுமட்டுமன்றி மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட இன்னபிற சமூகமாற்றத்திற்கான அமைப்புகளின் நிகழ்வுகளில் கருத்தாளர்களாக இம்மூவரையும் காண இயலும்.

திருவாரூர் எனும் பரந்துபட்ட சமூகவெளிக்குள் இயங்கும் அத்தனை பேருக்கும் இவர்கள் மூவரையும் தெரிந்திருக்கும். யாருக்கேனும் அப்படித் தெரிந்திருக்கவில்லையெனில், தொலைக்காட்சியிலோ, இணையத்திலோ, பேசியிலோ, தத்தம் துறையிலோ ஐக்கியமானவர்களாக இருப்பார்கள்.

சுபாஷ் காந்தி அவர்களின் மரணமென்பது வருத்தத்திற்குரிய பெரும் இழப்பிற்குரியது. இன்று செல்பேசியால் தகவல் பரிமாற்றம் மிக எளிதாகிப் போன காலத்தில் இயங்கும் வாட்சப்-பேஸ்புக் போன்ற இணையப்போராளி அல்ல அவர். தகவல் தொழில்நுட்பத்தின் எதற்கும் வாய்ப்பற்ற 20ஆம் நூற்றாண்டின் நிறைவுக் காலகட்டத்தில் பலதரப்பட்ட மக்களுக்குத் தேவையான கருத்தூக்கத்தை விதைத்துச் சென்ற போராளி தான் சுபாஷ்காந்தி.

மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க கூடிய தன்னார்வலர். தன் வாழ்நாளில் அதிகப்படியான இரத்ததானம் செய்த வலிமையாளர். மக்களுடனான அணுக்கமான சிந்தனையைக் கடைபிடித்தவர். புதியன விரும்பி அறியும் இளையவர்.

ஒருமுறை அகில இந்திய வானொலியில் இளைய பாரதம் நிகழ்ச்சிக்காக பேச சென்றிருந்த பொழுது எதேச்சையாக ஜெயராமன் அவர்களுடைய நெல் மீட்டெடுப்புகளை பற்றி சொல்லும் வாய்ப்பு கிட்டியது. அதற்கு உதாரணமாக இருந்தவர் சுபாஷ் காந்தி. கடுமையாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த பொழுது அதிலிருந்து இயற்கை நெல்வகைகளை உண்டு உடல்நலத்தை மீட்டெடுத்தார். கடுமையான சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு உடல்நலம் திரும்பிய பின்னர் சமூக இயக்கங்கள் தொடர்ந்து இயங்கினார்.

நம்ம ஊரு செய்தி இதழை நான் முத்துக்குமார், எஸ்எம்டி பாலாஜியோடு இணைந்து நடத்திய போது வழிகாட்டுநராக இருந்தவர் .முதல் முறையாக ஆரூரின் அடையாளங்களை வெளிப்படுத்தும் பகுதியைத் தொடங்கிய போது முதல் நபராக எங்களுக்குத் தெரிந்தவர் . அந்தச்செய்தி இதோ.

எப்போதும் “தமிழ்பரதன் தமிழ்பரதன்” என்றழைப்பார். ஏதேனும் முரணான கருத்துகள் தெரிவிக்க வேண்டுமெனில், ”இல்ல தமிழ்பரதன் இது இப்படி இருக்கும்.. நாம தான் இப்படி அணுகணும்” எனச்சொல்வதுண்டு. தன் கல்வி இல்வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றுக்கொடுப்பார். யாரைப் பற்றிய தொடர்புத் தகவலும் கையில் வைத்திருப்பார். சில வெளியூர் பயணங்கள் சென்றுவரும் போது இது உங்களுக்காகத் தான் வாங்கி வந்தேன் என்று சொல்லி புத்தகங்கள் கொடுப்பார்.

ஆவணப்படுத்துதலை காந்தி சாரிடமிருந்து தான் கத்துக்கிட்டேன். தன் அறிக்கையை முகநூலில் பதிவேற்றுவார். முக்கியச் செய்திகளை ஒளிப்படமாக்கி முகநூலில் பதிவார். பதிவு செய்தல் என்பதை மிக முதன்மையானதக் கொண்டவர். வயதில் சிறியவன் என்றாலும் என் கருத்துகளுக்கும் சம உரிமை கொடுத்துக் கொண்டாடியவர்.

தான் சந்தித்த மாணவர்களை சமூக சிந்தனைக்குரியவர்களாக மடைமாற்றி வளர்த்தெடுத்தவர். பல குடும்பங்களின் மறுமலர்ச்சிக்கான சிந்தனைப் போக்குகளை வழிவகுத்துக்கொடுத்தவர்.

திருமணம் செய்து கொள்ளவில்லை அவர். சமூகத்திற்காகப் பல தியாகங்கள் செய்தவர். அதிகம் பட்டப்படிப்பெல்லாம் படித்தது கூட இல்லை. ஆனால், எல்லா சமூக நிகழ்வுகளையும் கையிருப்பில் வைத்திருப்பார். எல்லாரும் எளிதில் அணுகும் வண்ணம். ஒரே கெட்ட பழக்கமென அவரே ஒப்புக்கொண்டது தேநீர் அருந்துவது தான். தவிர்க்க முடியாத ஒன்றாகப் போன பழக்கம் அது. சர்க்கரை நோய் எனத் தெரிந்தும் தேநீர் மீது தீராப்பற்று கொண்டிருந்ததே உடலுக்குகு கேடாகிப்போனது.

முன்பெல்லாம் ஜீவி கடையில் அவரைப் பார்ப்பதுண்டு. பிந்நாட்களில், ஆரூர் பக்கு கடையில் சுபாஷ் காந்தியைச் சந்திக்கச் செல்வேன். ஊருலகக்கதைகள் பேசி முடிக்கும் வாய்க்கு பக்கு அண்ணன் வாங்கித் தரும் தேநீர் பசியாற்றும். ஆரூர் பக்கு அவர்களுடைய வாழ்க்கையினை சுருங்கிய வடிவமாக நாற்றாங்கால் எனும் குறும்படமாக எடுக்க முனைந்த போது, அருகிருந்து நெறிப்படுத்தியவர். போதிய தொழில்நுட்ப உதவி இல்லாத காரணத்தால் தொழில்முறை குறும்படமாக அது உருப்பெறவில்லை. எனினும் அது திருவாரூர் அளவில் எடுத்த ஒரு முதன்மைக் குறும்படமாகவே இருக்குமென்பது அவர் எண்ணம். இன்று கூட ஆரூர் பக்கு தான் அழைத்து சேதி தெரியுமா என்று கேட்டார். அவரிடம் என்ன பதிலுரைப்பது எனவறியாது திக்கித் திணறி பேசி முடித்தேன்.

அரசியல், வர்த்தகம், விளம்பரம், ஆன்மீகம் இவை தவிர்த்திருக்கும் சமூகத்தின் விளிம்புகளை தன்னால் இயன்றவரை போராடி மீட்டிருந்தார். நாங்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மடப்புரம் உயர்நிலைப்பள்ளியில் துளிர் இல்லம் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தப் பள்ளியின் நிர்வாக உறுப்பினராக விளங்கிய அவரே அதற்கு முழுமுயற்சி மேற்கொண்டிருந்தார். 2017ஆம் ஆண்டு அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி அதன் முதல்நாள் சுபாஷ்காந்தியின் உரையோடு அப்துல்கலாம்-யஷ்பால் துளிர் இல்லத்தை இப்னு அரபியோடு சேர்த்துத் தொடங்கி வைத்தோம்.,

தமிழ்நாடு அறிவியல் இயக்க திருவாரூர் ஒன்றியத்தின் சார்பில் அறிவியல் கோளரங்கம் அல்லது வான்வழி அறிவியல் அறிதல் நிகழ்ச்சிக்காக பேசிக்கொண்டிருந்த போது, அதற்கான நிதித் தேவையை ஏற்படுத்தித் தருவதற்கான வாயில்களைக் காட்டினார். ஆனால், நான் தில்லி வந்துவிட்ட காரணத்தால் அவருடைய அவ்வழிகாட்டல் வரைவுத் திட்டம் முடித்த கையோடு அப்படியே ஏடுகளில் முடங்கிப் போய்விட்டது.

மகாத்மா காந்தியின் நினைவு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் மடப்புரம் பெருமாள் சன்னதி வீதியில் ஜனவரி 30ஆம் தேதி மாலை 05.17க்கு அரங்கேற்றுவார் சுபாஷ் காந்தி. பெரும்பாலான நிகழ்வுகள் அடையாளப்படுத்தலுக்காக நிகழ்த்தப்படும் போது, காந்தி மரணித்த அந்த நிமிடம் ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்நிகழ்வு முதன்மையானதாகும். உறுதிமொழியும் அதன்பின்னான மலரஞ்சலியும் வருகை தந்திருப்போரால் நிகழ்த்தப்படும். நிறைவில் இயற்கை உணவோடு காந்தியின் நினைவலைகளைத் தாங்கி முடிவுறும்.

திருவாரூரில் அரசியல் சாயமற்ற சமூகத்தின் பால் சிந்தனை கொண்ட அடுத்தத் தலைமுறையை வளர்த்தெடுத்ததில் இவர் பங்கு முதன்மையானது. தனது திருப்புமுனை காணட்டும் திருவாரூர் எனும்  நூலை திருவாரூர் சுடுகாட்டில் வெளியிட்டவர் .தன் வாழ்க்கைப் பயணத்தை வழிகாட்டும் வானவில் எனும் நூலாக 2016 ஜனவரி 30இல் வெளியிட்டார்.

கடைசியாக அவரைப் பார்த்தது 2018 டிசம்பர் 26., ராஜ்குமார் அவர்களின் அச்சகத்தில். 2019 ஜனவரி 30ஆம் நாள் நிகழவுள்ள மகாத்மா காந்தியின் நினைவு நாள் நிகழ்விற்கான அழைப்பிதழ் சரிபார்ப்புக்காக வந்திருந்தார். முதல் நாள் கீழவெண்மணியில் நடந்த நிகழ்வுகள் பற்றியெல்லாம் கேட்டறிந்தார். கொஞ்சம் பேச்சு. கொஞ்சம் விசாரிப்பு. தில்லி வாழ்க்கைப் பற்றிய விசாரிப்புகளையும் தன் தில்லிப் பயணத்தின் அனுபவங்களின் ஊடே கேட்டறிந்தார். பேசி முடித்த பின், ‘வாங்களேன் டீ சாப்டு போலாம்’ என்றார். இல்லை வேணாம் என்ற போது, சரி நான் புறப்படுறேன் எனப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் இன்று.

சார், ஒரே ஒரு முறை எனக்கொரு டீ வாங்கிக்கொடுத்துட்டு போங்க!

-த.க.தமிழ்பாரதன்
புதுதில்லி
13.01.2018
https://bit.ly/2SQ3OUP

No Comments

Leave a Reply