அன்புள்ள ஆருயிர்க்கு,
நலம். விழைவதும் அதுவே. இந்தக் கடிதத்தை எழுதுவதற்காக இத்தனை ஆண்டுகளாய் காத்திருந்தேன். நெடிய காத்திருப்புதான். இன்றைக்குத்தான் அதற்கு வாய்ப்பு கிடைத்தது.
பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஸ்டார்பக்ஸ் கடை ஒன்றில் கேபசினோ என்றால் என்ன என்றறியும் பொருட்டு தண்டமாய் 247₹ செலவு செய்துவிட்டு காத்திருக்கும் பொழுதில்
இதை எழுதத் தொடங்கி இருக்கிறேன்
உனக்கு என்னைத் தெரிந்திருக்கலாம். எனக்கும் அப்படியே இருந்திருந்தால் இந்தக் கடிதத்தின் தேவையே இல்லாமல் போயிருக்கும். ஆனால், நம்முடைய அல்காரிதம் அப்படியிருக்கவில்லை.
நீ என் எதிர்காலத்தில் இருக்கிறாய். நான் உன் இறந்தகாலத்தில் இருக்கிறேன்.
நான் உன் இறந்தகாலத்தில் எழுதியதை நீ என் எதிர்காலத்திலிருந்து படித்துக்கொண்டிருக்கிறாய்.
இந்த இறந்தகாலமும் எதிர்காலமும் சந்திக்கும் புள்ளியான நிகழ்காலத்தைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். அப்போது நான் – நீ என்பவை சூன்யமாகிவிடும்.
இந்தத் தளத்தையே உன்னை வைத்துதான் வெளியிட விரும்பினேன். நிகழவில்லை. இயற்கையின் அல்காரிதத்தில் இதை நீ படித்துக்கொண்டிருப்பதே பெரும்பேறு.
இயற்கையின் அல்காரிதத்தைப் புரிந்துகொள்வது கடினம். புரிந்துகொள்ள முயலுவதும் வீண். இயற்கையின் அல்காரிதத்தை “விதி” என்பர் அல்லது “ஊழ்” என்று கொள்ளலாம். இயற்கையின் அல்காரிதத்தைக் காலப்பயணத்தில் மட்டுமே மாற்றியமைக்க முடியும்.
காலப்பயணம் இருக்கட்டும் கடிதப் பயணத்திற்கு வருவோம். இதை முன்னமே உன்னிடம் பகிர்ந்திருக்க வேண்டும். புவிப்பயணத்தில் 25 ஆண்டுகளைக் கடந்த பிறகுதான் குறைந்தபட்ச அறிவாவது வரும் என்று முரட்டுத்(முட்டாள்)தனமாக நம்பியதால் இவ்வளவு காலத்தாழ்ச்சி ஆகிவிட்டது.
புரிந்திருப்பாய், புலம்பல்கள்தான். இந்தப் புலம்பல்கள்தான் பெரும் சிக்கல்கள். வெற்றிகரமான மனித வாழ்வில் இதைத் தீர்த்துவைக்கவும் திரும்பவராமல் செய்யவும் வேண்டியுள்ளது.
நூல்களை ஆழ்ந்தகன்று கற்ற, தம் துறையில் தடம் பதித்த ஒருவரை இன்று காலை சந்தித்தேன். அகவை அறுபதுக்கு மேல் இருக்கும். அவருக்கும் புலம்பல்கள் இருந்தன. “என்னைச் சுற்றியுள்ள எல்லாரும் என் நிழலில் இளைப்பாறுகிறார்கள், யாரும் எனக்குத் தேவையானதைச் செய்வதற்குத் தேவையான காலத்தில் உடனிருப்பதில்லை. என் தேவையை அறிந்திருப்பதுகூட இல்லை” என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.
இந்தப் பிறப்பும் வாழ்வும் உலகை உய்யத்தானே அன்றி, புலம்புவதற்கா என்ன?
புலம்பல்களில் சிக்கிக்கொள்ளும் வாழ்விலிருந்து விடுபட்டு வாழ்வினிமை காண்பதற்கான பாதையாக இக்கடிதப் பயணம் அமையும் என்று நம்புகிறேன்.
இந்தக் கடிதப் பயணம் ஒருவழிச் சாலையாக மட்டுமே இருக்குமென்பதில் எனக்கும் வருத்தம்தான். இதை இருவழிச்சாலையாக நீ மாற்றும்வரை ஒருவழிச்சாலையாகவே இருக்கும்.
இக்கடிதத் தொடர் பேருக்கென எழுதப்பெறாது. வாரவாரம் மாதாமாதம் என்ற எவ்விதக் கட்டாயத்திலும் எழுதப்பெறாது. எப்போதெல்லாம் உனக்காக எழுதத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் எழுதுகிறேன்.
இந்த இணையதளத்தின் முதல் பதிவாக அமையும் இதனைப் பயணித்தே வந்து கண்ணகி சிலையில் நிறைவு செய்கிறேன்…
தக | 05.12.2021
No Comments