நம்சமையலறையில்…

வணக்கம்.

குமுதம் இதழ் மற்றும் கொன்றை அறக்கட்டளை இணைந்து நடத்திய சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு (ஒரு இலட்சம் உரூபா) பெறும் நம் சமையலறையில்… கதை 09.12.2020 நாளிட்ட குமுதம் இதழில் வெளியானது. கதை படித்தபின், தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால் மகிழ்வேன். 

நன்றி : குமுதம் & கொன்றை அறக்கட்டளை

நம் சமையலறையில்…                                             

                    -த.க.தமிழ்பாரதன்

இன்னும் சில மணிநேரமே இருக்க, அவசர அவசரமென அம்மாவுக்கு அழைத்தான். இக்கட்டான பொழுதுகளிலெல்லாம் இவ்வுலகை அறிமுகப்படுத்தியவரிடமே ஆலோசனைகள் கேட்கப்படுகின்றன. நான்கைந்து முறை அழைத்தும் அம்மா எடுக்கவில்லை. கடைசி முயற்சியாய் அழைத்துப்பார்ப்போம்.  எடுத்தால் சரி, எடுக்காவிட்டால்…. அந்தப் பேச்சுக்கே இடமில்லை, எடுத்துவிடுவார். எண்ணிக்கொண்டிருக்கையில், ‘ஆசப்பட்ட எல்லாத்தையும்..’ ஒலித்தது.

“இப்பதான் நியூசு பாத்தன். இராத்திரிலருந்து ஊரடங்கு அமலுக்கு வருதாம். ஹாஸ்டல் காலி பண்ணிட்டு கிளம்பி வாரேன்னு சொன்னீயே? எங்க இருக்க?”

“அலோஓ, அம்ம்மா இங்க ஒரே கூட்டம். ரயில்லாம் இல்ல. கார் எடுக்க மாட்டேங்கறாங்க. பஸ்ல தான் வந்தாகணும். இந்தக் கூட்டத்துல வர்ரதுக்கு வராம இருக்கலாம். ஆனா, சென்னையில எங்க தங்கறது? யாருமே வீட்டுக்குள்ள விடமாட்டாங்க, ஒன்னுமே புரியல. ஏதாச்சும் ஐடியா கொடேன்.”

கன்சல்டன்சியில் பணிபுரிபவனுக்கு அம்மா ஆலோசனை தந்தாள்.

“கோவிச்சிக்கலனா ஒன்னு சொல்லுவேன்!”

“ஏது வள்ளி வீட்டுக்குப் போகணுமா? பேசவே வேணாம் போன வை!”

நிரம்பி வழியும் கோயம்பேடு, தாம்பரம் தாண்ட மறுக்கும் கார்கள், நிலையத்திலே தூங்கும் ரயில்கள் என  இயல்பைப் புரட்டிப்போட்டிருந்தது கொரோனா. 144 தடை உத்தரவு 48 நாட்களுக்கு அமல் என அரசு அறிவித்தவுடன் வாடகைக்குத் தங்கியுள்ள விடுதி வாட்சப் குழுவில் நிர்வாகி ஒரு பதிவிட்டார். “உணவு சமைக்க ஆள் வரமாட்டார், உணவகங்களும் இருக்காது”. கண்ணில்பட்டதும் காலி செய்துவிட்டு ஊருக்குக் கிளம்பினான். மாலை வரை சுய ஊரடங்கென்று ஆட்டோ, டாக்சி எதுவும் ஓடவில்லை. விடுதிவாசலில் நின்று ஆன்லைன் அப்டேட் செய்தவனுக்கு, கோயம்பேடு சென்றால் கொரோனா தொற்றிடுமோ எனும் பயம்.

உறவினர் வீட்டுக்குச் செல்லலாம். 48 நாள் உட்கார வைத்து சோறுபோடுமளவுக்கு நெருங்கிய உறவினர் இல்லை. நண்பர்களோடு இருக்கலாம். தனியனாய் இருந்த கடைசி நண்பனும் கடந்த மாதம் இணையராய் மாறிவிட்டான். தான் தொந்தரவாகிவிடுவோமோ என்றஞ்சி யாரையும் தொந்தரவு செய்யவில்லை. அம்மா கூட புரிந்துகொள்ளாமல் வள்ளி வீட்டில் தங்கச் சொல்கிறாள் என்கிற எரிச்சல் வேறு.

தன்னைத் தானே நொந்துகொண்டு, விடியும் கிழக்கை நோக்கி நடக்கத்தொடங்கினான். வள்ளியின் வீடும் வீடிருக்கும் ஊரும் கிழக்கில் எதேச்சையாக அமைந்திருக்கவில்லை. அங்கங்கு நாய்களும், கண்ணுருட்டும் ஆந்தைகளும் கூடடங்கிய பறவைகளும் தவிர விண்மீன்களும் அறிய நடந்தான், நடந்தான், நடந்தான்…. நிலையா உலகில் இயற்கை அடக்குகிறது. தற்காத்துக்கொள்ள ஓடி ஒளிய வேண்டியிருக்கிறது. இந்த எதார்த்தம் வாழ்வின்மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியது.

சற்றும் எதிர்பாரா நேரம், காலம், பொழுது அது. ‘உனக்கே உயிரானேன், எந்நாளும் எனைநீ மறவாதே, நீ இல்லாமல் எது நிம்மதி, நீதான் என்றும் என் சந்நிதி; கண்ணே கலைமானே கன்னி மயிலென…’ அழைப்பு ஓய்ந்தது. வள்ளியின் அழைப்பு. கிட்டத்தட்ட இரண்டு மாதம் கழித்து இந்தப் பாடலை கேட்கிறான். இந்த வரிகளும் வரிகளேற்படுத்திய வசந்தமும் நினைவுகளைக் கிளறிவிட்டன.

‘உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ..’ அழைப்பை ஏற்றான். ஏதும் பேசவில்லை.

“நீ என்ட்ட பேசமாட்டேன்னு தெரியும். பேசவும் வேணாம்.  நானும் உன்ட்ட பேசிருக்க மாட்டேன்.  இராத்திரி அம்மா பேசனாங்க. கோவத்துல வச்சிட்டியாம். நட்ராத்திரில இங்கதான் சென்னைல எங்கயாவது நின்னிட்டிருப்ப, லொகேசன் அனுப்பு, நான் வந்து அழைச்சிட்டு போயிடறேன்.”

பதில்களை எதிர்நோக்காமல் துண்டித்துவிட்டாள். அவன் லொகேசன் அனுப்புவதற்குள் காரினை எடுக்க அடுக்குமாடிக்குடியிருப்பின் தரைகீழ்தளம் வந்திருந்தாள். லொகேசன் பார்த்தவளுக்கு கலைந்த முகத்தைக் கண்ணாடியில் பார்த்ததுபோலாயிற்று. அவளது குடியிருப்பின் வெளியே நிற்கும் அவனைப் பார்த்தாள், அழைத்தாள்; நகரவில்லை. மீண்டும் அழைத்தாள்;  பலனில்லை. அழைத்துக்கொண்டு ஏற 18ஆம் தளம் சென்றது மின்னேணி.

*