வளர்ச்சியை நிலைநிறுத்தும் இந்தியா-பெலாரஸ் உறவுகள்
(சிஐஎஸ் மூலோபாய ஆய்வாளர் முனைவர் இந்திராணி தாலுக்தார் எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த.க.தமிழ் பாரதன்)
13.08.2020 ஆங்கிலக் கட்டுரை : http://airworldservice.org/english/archives/102320
பெலாரஸின் தற்போதைய அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ 2020 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 26 ஆண்டுகளுக்கும் மேலாக பெலாரஸின் அதிபராக இருந்து வருகிறார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, தலைநகர் மின்ஸ்க் மற்றும் பிற இடங்களில் குடிமக்கள் தங்கள் அதிருப்தியைக் காட்ட வீதிக்கு வந்தனர். இருப்பினும், தேர்தல் முடிவுகள் இந்தியாவிற்கும் பெலாரஸுக்கும் இடையிலான இருதரப்பு உறவில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
பெலாரஸுடனான இந்தியாவின் உறவுகள் மரபுரீதியாக சுமூகமாக இருந்துள்ளன. சோவியத் யூனியன் பிரிந்த பின்னர் 1991இல் பெலாரஸை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்த முதன்மையான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த அங்கீகாரம் இரு நாடுகளுக்கும் பல்வேறு விசயங்களில் நல்ல புரிதலையும் பொதுவான கருத்துக்களையும் வளர்த்துக் கொள்ள உதவியது. ஐ.நா.பாதுகாப்புக் குழு (யு.என்.எஸ்.சி) மற்றும் அணுசக்தி வழங்குநர் குழு (என்.எஸ்.ஜி) போன்ற பலதரப்பு மன்றங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு காணப்படுகிறது. உண்மையில், ஜூலை 2020இல் யு.என்.எஸ்.சி.யில் நிரந்தரமற்ற இடத்திற்கான இந்தியாவின் வேட்புமனுவை உறுதிப்படுத்த உதவிய நாடுகளில் பெலாரஸும் ஒன்றாகும். பல்வேறு சர்வதேச அரங்குகளில் பெலாரஸின் ஆதரவை இந்தியாவும் பரிவர்த்தனை செய்துள்ளது. ஐ.நா. அணிசேரா இயக்கம் (என்ஏஎம்) மற்றும் ஐபியு (இடை-நாடாளுமன்ற ஒன்றியம்) போன்ற பிற பன்னாட்டு மற்றும் பலதரப்பு குழுக்களில் பெலாரஸின் உறுப்பினர்நிலையை புதுதில்லி ஆதரிக்கிறது. மனித உரிமைகள் மீறல் மற்றும் கருத்துச் சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்காக பெலாரஸை குறிவைத்த ஜெனீவா மற்றும் நியூயார்க்கின் பல்வேறு தீர்மானங்கள் குறித்த இந்தியாவின் ஆதரவு நிலைப்பாடு பெலாரஸால் மிகவும் பாராட்டப்பட்டது.
உலகளாவிய சக்தியாக வளர்ந்து வரும் இந்தியாவின் வளர்ச்சியைப் புரிந்துகொண்டு, பெலாரஸ் இந்தியாவுடன் “மூலோபாய உறவை” வளர்க்க முயல்கிறது. ஜி20, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மற்றும் பிரிக்ஸ் ஆகியவற்றில் புதுதில்லியின் உறுப்பினர்நிலை பெலாரஸுக்கும் குறிப்பிடத்தக்கதாகும், இது குறிப்பாக யூரேசிய பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த விரும்புகிறது.
சுமூகமான நட்புறவை வளர்ப்பதில் இரு நாடுகளும் கடுமையாக உழைத்துள்ளன. இது, இரு தரப்பிலிருந்தும் உயர் மட்ட வருகைகளுடன் வெளிப்படையாகத் தெரிகிறது. இரு தரப்பினரும் பல்வேறு பகுதிகளில் ஒத்துழைத்து வருகின்றனர். உலோகங்கள் மற்றும் சுரங்கங்கள், கல்வி மற்றும் கனரக எந்திரங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், எரிசக்தி துறை, பொட்டாஷ் உரங்கள், இந்தியாவில் பொதுமின்சார போக்குவரத்து முறையை நவீனமயமாக்குதல், வேளாண்மை மற்றும் வேளாண் பதப்படுத்துதல் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் பெலாரஸ் ஒத்துழைத்து வருகிறது. பாதுகாப்புப் பகுதிகளை உற்பத்தி செய்யும் கூட்டுத் திட்டங்களுக்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. சோவியத் காலத்து பாதுகாப்புக் கருவிகளைப் பராமரிப்பதிலும் மேம்படுத்துவதிலும் பெலாரஸ் உயர் திறன்களை வளர்த்து வருவதால் இது இந்தியாவுக்கு நன்மை பயக்கும்.
2015ஆம் ஆண்டு அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவரின் பெலாரஸ் பயணத்தின் போது, புதுதில்லி மற்றும் மின்ஸ்க் பல ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இதில் இந்திய பங்குகள் பரிவர்த்தனை வாரியம் (செபி) மற்றும் நிதி அமைச்சகம், இந்திய தரநிர்ணய செயலகம் அத்துடன் பிரச்சார் பாரதி மற்றும் பெலாரஸ் தேசிய தொலைக்காட்சி இடையேயான ஒப்பந்தங்கள் அடங்கும். அமைதித் தூதரை பெருமைப்படுத்தும் விதமாக 2018இல் பெலாரஸ் மாநில பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தியின் சிலையையும் பெலாரஸ் நிறுவியது. இரு நாடுகளுக்கும் இடையிலான உயர் மட்ட வருகைகளின் ஒட்டுமொத்த நிலை வெற்றிகரமாக உள்ளது.
பொருளாதாரத் துறையில், 2019ஆம் ஆண்டின் இருதரப்பு வர்த்தக வருவாய் 569.6 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. முந்தைய ஆண்டை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015ஆம் ஆண்டில் பெலாரஸுக்கு சந்தைப் பொருளாதார நிலையை வழங்கிய இந்தியாவின் சிறப்பு செயற்குறிப்பு மற்றும் 100 மில்லியன் அமெரிக்க டாலர் கடன்வரம்பு ஆகியவை பொருளாதாரத் துறையின் வளர்ச்சிக்கு உதவியுள்ளன. ‘மேக் இன் இந்தியா’ திட்டங்களில் முதலீடு செய்ய பெலாரஸ்ய வணிகர்களுக்கு இந்தியாவின் ஊக்கம் பலனைத் தருகிறது.
பெலாரஸின் மூலோபாய இருப்பிடம் யூரேசியாவிற்கான இடைக்கால உயிர்நாடியாக மாறும், மேலும் எதிர்காலத்தில் சர்வதேச வடக்கு-தெற்கு தாழ்வாரத்துடன் (ஐ.என்.எஸ்.டி.சி) இணைவதற்கு இந்தியாவுக்கு உதவ முடியும். ரஷ்யா உள்ளிட்ட பிற ஐ.என்.எஸ்.டி.சி உறுப்பினர்களுடன் பெலாரஸ் பகிர்ந்து கொள்ளும் வலுவான உறவு இந்தியாவுக்கு பெரும்நன்மை அளிப்பதாகும்.
இந்தியாவிற்கும் பெலாரஸுக்கும் இடையிலான இருதரப்பு நம்பிக்கையையும் புரிதலையும் கருத்தில் கொண்டால், அந்த உறவு வலுவடையும். இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின்கீழ் பெலாரஸின் மனிதவள மேம்பாட்டிற்கு இந்தியா உதவுகிறது. இதுவரை, 290க்கும் மேற்பட்ட பெலாரஸ்ய அதிகாரிகள் மற்றும் பிறர் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த ஆண்டு பயணத்தை பெலாரஸ் எதிர்நோக்கியுள்ளது, இது இருதரப்பு உறவுகளுக்கான முக்கிய நிகழ்வாகக் கருதப்படும்.
நன்றி : அகில இந்திய வானொலி, திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம்