உத்திரப்பிரதேசத்தில் விருதுபெற்ற தமிழக ஐபிஎஸ் அதிகாரி !

             ரௌடி விகாஸ்துபே என்கவுண்டர் இன்று நிகழ்ந்திருக்கிறது. இது தேசிய அளவில்  முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகக் கருதப்படுகிறது. கடந்த ஜூலை 2ஆம் நாள் கான்பூர் மாவட்டம் பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ்துபே-ஐ கைதுசெய்ய 8 காவலர்கள் (DSP-1, SI-3, Constable-4) சென்றுள்ளனர். அவர்களை சுட்டுக்கொன்று தப்பியோடிவிட்டார் விகாஸ் துபே. அதன்பின், அவரது தலைக்கு உபி அரசாங்கம் 2.5 இலட்சம் தொகை நிர்ணயித்தது. அது, 5 இலட்சமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நேற்று ஜூலை9 ஆம் நாள் மத்தியப்பிரதேசத்தில் உஜ்ஜைனியில் கைது செய்யப்பட்டார். அவரை கான்பூர் கொண்டுவரும் வழியில்  தப்ப முயன்றிருக்கிறார். இதனால் என்கவுண்டர் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது உத்திரப் பிரதேச கான்பூர் மாவட்டத்தின் SSP ஆக  தமிழகத்தைச் சேர்ந்த IPS அதிகாரி தினேஷ்குமார் பணியாற்றிவருகிறார். அவருக்கு உபி அரசு 2019 குடியரசு தினவிழாவில் விருதளித்தது. இதையொட்டி விகடன் ஆர்டிகலுக்காகப் பேட்டி எடுத்திருந்தேன். அது சில காரணங்களால் வெளியாகவில்லை. அதனை இப்போது  எடிட் செய்யாது வெளியிடுகிறேன்.

-தக | 10.07.2020

உத்திரப்பிரதேசத்தில் விருதுபெற்ற தமிழக ஐபிஎஸ் அதிகாரி

ஒவ்வொரு ஆண்டும் இந்தியக் குடியரசு தின விழாவில் சமூகத்திற்கு நன்மை செய்த பல்துறையைச் சேர்ந்த ஆளுமைகள் அரசாங்கத்தினால் பாராட்டப்படுவது நாம் அறிந்ததே. நேற்று (26.01.2019) நடைபெற்ற குடியரசு தின விழாவில் காலிஸ்தான் தீவிரவாதிகளைப் பிடித்தமைக்காக விருது கொடுத்து பாராட்டப்பெற்றிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி தினேஷ்குமார்.

விருது பெற்றதன் பின்னணி

2018 அக்டோபர் 2 இரவு. உத்திரப்பிரதேசத்தின் மேற்கில் உள்ள ஷாம்லியின் ஜின்ஜனா காவல் நிலைய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் காவலர்கள் மீது பாய்ந்தனர். ஒரு காவலரைச் சுட்டுவிட்டு, மற்றொருவரைத் தாக்கினர். காவலர்களின் 303 மற்றும் இன்சாஸ் இயந்திர நவீனத் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

அவர்களைக் கண்டுபிடிக்க ஷாம்லி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரான தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் நான்கு குழுக்கள் அமைத்தார். உபி.யின் மேற்குப் பகுதிகள்  மற்றும் எல்லைப் பகுதிகளில் அவர்கள் தொடர்ச்சியான தேடுதல் வேட்டை நடத்தினர். இதற்கிடையில் துப்பு கிடைத்தது. அதனடிப்படையில், ஹரியானாவின் எல்லைப் பகுதியில் காவல்துறையினர் துப்பாக்கிகளை அபகரித்துச் சென்றவர்களில் மூவரை மடக்கிப் பிடித்தனர். இச்சம்பவத்தின் போது, குற்றவாளிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர்.

குற்றவாளிகளிடம் அக்.02 ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலர்களிடமிருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கிகள் மட்டுமல்லாது சீனக் கைத்துப்பாக்கியும் இருந்தது. அவை கைப்பற்றப்பட்டு, விசாரைணை நடைபெற்றது. விசாரணையில் அவர்கள் காலீஸ்தான் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அக்.07 ஆம் தேதி  பஞ்சாப் பாட்டியாலாவில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

 இந்திய சுதந்திரத்தின் பின், பஞ்சாப் மாநிலத்தை காலிஸ்தான் என தனிநாடாக அறிவிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சில அமைப்புகள் ஆயுதம் ஏந்திப் போராடி வருகின்றனர். சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட அவர்கள் “காலிஸ்தான் தீவிரவாதிகள்“ எனப்படுகின்றனர். அக்கூட்டத்தில் மேனாள் முதல்வரும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் பிரகாஷ்சிங் பாதல் மற்றும் அவருடைய மகனும் அக்கட்சியின் தலைவருமான சுக்பீர்சிங் பாதல் கலந்து கொள்ள இருந்தனர். இவர்களிருவரும் தனிநாடு கோரிக்கையில் உடன்பாடு இல்லாதவர்கள்.

இந்தத் தீவிரவாதிகளின் குறி, சுக்பீர்சிங் பாதல் மீதே இருந்துள்ளது, தெரியவந்துள்ளது. உபியிலிருந்து, ஹரியானா வழியாக, பஞ்சாப் செல்வது அவர்களது திட்டமாக இருந்தது. ஆனால், அவர்களைப் பிடித்ததால் அசம்பாவிதச் சம்பவம் முறியடிக்கப்பட்டது. 

இது போன்ற தீவிரவாத வழக்குகளை மத்தியப் புலனாய்வு அமைப்புகளான ஐபி அல்லது ஐஎன்ஏ போன்றவையே விசாரணை செய்யும். ஆனால், காவல்துறையினர் கண்டுபிடித்தது சமீபகாலத்தில் பெருமைக்குரிய செயல் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

       ஐபிஎஸ் அதிகாரி தினேஷ்குமாரின் இந்தத் துரிதச் செயலைப் பாராட்டி, அவருக்கு உத்திரப்பிரதேச மாநிலம், சஹரான்பூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் உபி.யின் ஆயுர்வேதத்துறை அமைச்சர் தரம்பால் சிங் செய்னி DGP Commendation Desk’s silver விருது வழங்கி சிறப்பித்தார்.

தற்போது, சஹரான்பூர் மாவட்ட எஸ்எஸ்பியாகப் பணியாற்றி வரும் தினேஷ்குமார் அவர்களிடம் பேசினோம்

“மேட்டூரின் சின்னதண்டா கிராமத்தைச் சேர்ந்த நான் விவாசயத்தைப் பின்புலமாகக் கொண்டவன், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படித்து 2009இல் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியில் அமர்ந்தேன். கடந்த காலத்தில் பல்வேறு சவாலான வழக்குகளைச் சந்தித்திருந்தாலும், இது முதன்மையான ஒன்று. உரிய நேரத்தில், உரிய வேகத்தில் செயல்பட்டமையால் அவர்களைப் பிடிக்க முடிந்தது. இச்செயலுக்காக உபி மாநில அரசு விருது கொடுத்துப் பாராட்டியிருப்பது பெருமைக்குரியது. தீவிரவாதிகளைப் பிடிக்க இணைந்து பணியாற்றிய அனைத்துக் காவலர்களுக்கும் சென்று சேரும்”. என்றார்.

இதுமட்டுமின்றி, கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி “டூன்” கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் இல்லத்தில்  50இலட்சத்திற்கும் மேலாகக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 18 நாள் விசாரணைக்குப் பின், 40இலட்சத்திற்கும் மேல் மீட்டுக் கொடுத்துள்ளார் இவர். சஹரன்பூரில் கொள்ளையடிக்கப்பட்டதில் அதிகபட்ச தொகை மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

உ.பி. தமிழருக்கு ஒரு சல்யூட்! 

– தக | 27.01.2019