ஒத்த செருப்பு – திரை விமர்சனம்

ஒத்த செருப்பு – திரை விமர்சனம்


மனித குலம், தன் இறந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டவற்றை நிகழ்காலத்தில் சோதித்துப் பார்த்திருக்கிறது. அப்படிப்பட்ட சோதனைகளே புதிய பரிமாணத்திற்கு வழிவகுத்துள்ளன. புதிய பரிமாணத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழ்த் திரையுலகில் ஒத்த செருப்பு எனும் திரைப்படத்தை சோதனை முயற்சியின் வெற்றி என்று கூறலாம்.தனிநபர் நடிப்பு, அதாவது (Mono acting) என்ற பிரிவில் ஒரு திரைப்படத்தையே வெளியிட முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என்று விடையெழுதியுள்ளார் பார்த்திபன். இன்றைய காலகட்டத்தில் வெற்றிகரமான படமெடுக்க ஒரு நாயகன் போதாதென, பல நட்சத்திரங்களை வைத்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கும், ட்ரெய்லர், டீசர், இசை வெளியீட்டு விழா என பல முன்னெடுப்புகளைச் செய்யவேண்டியுள்ளது. இச்சூழலில் எவ்வித ஆடம்பரமுமின்றி ஒத்த செருப்பு படத்தை தனிஒருவனாக இயக்கி, நடித்து, தயாரித்திருக்கிறார் பார்த்திபன்.ஒரு கதாப்பாத்திரத்தை மையமிட்டு சில அயல்மொழி திரைப்படங்கள் வந்துள்ளன.  ஆனாலும், அத்திரைக்கதையில் பிற பாத்திரங்கள் அவ்வப்போது வந்து செல்வதும் உண்டு. ஆனால், பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படத்தில் அவரைத் தவிர வேறெந்த கதாப்பாத்திரங்களும் திரைக்கதையில் தோன்றவேயில்லை. அவற்றின் குரல் மட்டும் பின்னணியில் ஒலிக்கின்றன.  அக்காதாப்பாத்திரங்களை நாம் அடையாளங்காண இலகுவாக ஒளிப்பதிவு செய்துள்ளார் ராம்ஜி.படம் முடிவடையும்வரை திரை முழுவதும் பார்த்திபனே நிறைந்திருக்கிறார். பார்த்திபன் திரையில் வராத காட்சிகள் மிகச்சொற்பம்.  கூத்துக் கலையில் கட்டியங்காரன், கதையை எப்படி எடுத்துரைத்து விவரிப்பாரோ! அப்படியே ஒத்த செருப்பு படமும் விவரிக்கிறது. இதைக் கூத்து மரபின் நீட்சியாகக் கருதமுடியும்.பார்த்திபனின் குரலாலும், அவருக்கு மட்டுமே கேட்கும் மனக்குரலாலும் நம் கண் முன்னே கற்பனையில் காட்சிகள் விரிகின்றன.  திரையில் என்னவோ பார்த்திபன் மட்டும்தான் தோன்றுகிறார். ஆனால், அவரது நடிப்பும், குரலும், உடல்மொழியும் நடந்தவற்றைக் காட்சிப்படுத்துகிறது.  இதற்கு வலுவாகப் பின்னணி இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவரா எனும் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள, பார்த்திபனைப் பிடித்து வருகின்றனர். தான் செய்த கொலையை  விவரிக்கும் பார்த்திபன் அதற்கான பின்னணியையும் விவரிக்கிறார். முற்றாக மாட்டிக்கொண்டோம் எனத்தெரிந்தபின், முன்னர் செய்த பிற கொலைகளையும் அதற்கான காரணங்களையும் நியாயப்படுத்துகிறார்.பெயரிடுதலில் சில காரணங்களைக் காண முடியும். கொலைகள் செய்திருந்தாலும் அதற்கு  நியாயம் சொல்லும் பார்த்திபனின் கதாப்பாத்திரப் பெயர் மாசு இலா மணி = மாசிலாமணி.  Muscular Dystrophy எனும் தசைஅழிவு நோயால் பாதிக்கப்பட்ட மகனின் பெயர் (முழுமுதற் கடவுளாக வணங்கப்படும்) மகேசுவரன் என்பதே.

(காவல்துறை விசாரணையில் தன் மனைவியைப் பற்றிப் பேசத்தொடங்கும் போது, பார்த்திபன் மேல்நோக்கி பார்ப்பார். மேலே உஷா நிறுவனத்தின் மின்விசிறி ஓடிக்கொண்டிருக்கும். அவருடைய மனைவியின் பெயர் உஷா என்பதும் அவர் இறந்து மேலே சென்றுவிட்டார் என்பதற்கான குறியீடாகக் கொள்ளமுடியும்.) 
தன் மகனுக்குக் காற்றாடி பிடிக்கும் என்பதால் அது பார்த்திபனுக்குப் பிடித்த ஒன்றாகிறது. காற்றாடி கையிலிருக்கும்போது பறக்காது. ஆனால், காற்றில் பறக்கும் போது, அதன் பிடிமானம் கையிலிருக்கும். அவ்வப்போது, தன்னை விட்டு மனைவி வெளிச்சென்றுவிடுகிறாள். பிடிமானத்திற்காக மீண்டும் வீடு வருகிறாள். கடற்கரை அருகே மனைவி விபத்தில் இறக்கும்  போது, காத்தாடி பிஞ்சி போச்சி என மகன் அழுவதாக வசனம் வரும்.  இவ்விடங்களில் காற்றாடியை மனைவிக்கான குறியீடாகக் கொள்ள முடியும்.வசனத்தைப் பொறுத்தவரையில் பஞ்ச் வசனங்கள் எதார்த்தத்தை எடுத்துரைக்கின்றன.  உலகமயமாக்கலால்  பொருளாதாரத் தன்னிறைவடையாமல் ஆற்றாமையில் இருக்கும் ஒருவனின் வெளிப்பாடு அவை.”காசில்லாதவனுக்குத்தான் கடவுள் பவருஉண்மையிலே, பவர்தான் சார் கடவுள்”,”பூனைக்கிட்ட குருவி மாட்டிக்கிடிச்சினா,குருவியா இருந்து பாருங்க! அதோட வலி தெரியும்”, “அதிகாரமென்பது,  இருக்குறவங்கள்ட்ட பணத்தையும்இல்லாதவங்கள்ட்ட உயிரையும் எடுத்துக்கறது தானே”.அழ வைக்கும் சில கணங்களிலேயே சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வசனங்களை எழுதியுள்ளார். இவ்விடங்களிலெல்லாம் பார்த்திபனாக மாசிலாமணி மாறியிருக்கிறார்.மனைவியை இரசிக்கும் தருணங்களில் கணவனாக உள்ளத்தைத் தழுவுகிறார். “குத்து விளக்குக்குப் பட்டுப்புடவை கட்டுன மாதிரி இருப்பா” என்றும், தன்னுடைய அழகோடு ஒப்பிடுகையில், “தலகாணிக்குப் பஞ்சிருந்தா தூங்கலாம், தங்கமிருந்தா தூங்க முடியுமா?” மனைவி அழகானவள் என்பது கிளாசிக் ரகம். இப்படிக் காதல் செய்யும் கணவனே மனைவியைக் கொலைசெய்திருப்பான் என சந்தேகிக்கும் காவல்துறையின் எண்ணத்தை குருவிகளிடம் பேசும் பார்த்திபன் செய்திருக்க மாட்டான் என உளவியல் நிபுணர் நம்புகிறார். அதுவும் உண்மையே. தாய்மை என்பது பெண்பால் மட்டும் தொடர்புடையதில்லை அன்பாலும் தொடர்புடையது என்பதை நோயுற்ற மகனைப் பாதுகாக்கும் தாயுமானவனாக பார்த்திபன் நிறுவுகிறார்.சிலநாட்களில் சாகவிருக்கும் மகனையும் அவனுக்காக வாழும் அப்பாவையும் அனாதையாக்கிய சூழலை கதைசொல்லியாகக் கேள்விகேட்கும் ஒத்த செருப்பாக பார்த்திபன் இருக்கிறார்.  பிற பாத்திரங்களைக் காட்சிப்படுத்தாததால், இச்சமூகத்தையும் கேள்வி கேட்டிருக்கிறார்.  படத்தின் நிறைவில் படத்தலைப்பான ஒத்த செருப்பிற்கான காரண முடிச்சை அவிழ்க்கிறார்.மொத்தத்தில், நடைமுறை உலகில் பயன்பாடற்றதாகக் கருதப்படும் ஒத்த செருப்பினை மையப்பாத்திரமாக்கி படமெடுத்திருப்பதில் வென்றிருக்கிறார் பார்த்திபன்.


-த.க.தமிழ் பாரதன், புதுதில்லி
புதுதில்லி அகில இந்திய வானொலியின் தமி்ழ்ப்பிரிவில் 13.10.2019 காலை ஒலிபரப்பில் ஒலிவலம் வந்தது. குரல் : திரு. சுந்தரமூர்த்தி, AIR 
(அடைப்புக்குறிக்குள் இடம்பெற்றவை தணிக்கை செய்யப்பெற்றவை)